தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நாளை (ஜன.15) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ”தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சியான பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன். அறுவடை திருநாளாக கொண்டாடப்படும் பொங்கல் தங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும்.
தாங்கள் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்து இந்த மாநிலத்துக்கு சேவையாற்ற வேண்டும் என மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆளுநருக்கு பூங்கொத்துடன் அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில், “மகிழ்ச்சியான பொங்கல், மகர சங்கராந்தி நாளில் தங்களுக்கும், தங்கள் குடும்பத்துக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொங்கல் வாழ்த்து
இதேபோல் அதிமுக சார்பில் தமிழ்நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், “ தமிழர் திருநாள் என்று போற்றப்படும் தனி சிறப்பு மிக்க பெருவிழாவை உலகெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எங்கள் அன்பார்ந்த பொங்கல் திருநாள் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறோம்.
குடும்பம் குடும்பமாக அன்புடன் வளர்க்கும் பசுவும், கன்றும் ஒருசேர தங்கள் அன்புக்குரல் எழுப்ப எல்லோரும் கொண்டாடி மகிழ்வோம்.
எந்நாளும் நாங்கள் உங்கள் நம்பிக்கைக்குரிய அன்பு சகோதரர்களாக உங்களுக்காகவே உழைப்போம்; தமிழ்நாட்டை உயர்த்தி வைப்போம் என்பதே எங்களது பொங்கல் திருநாள் வாழ்த்து செய்தியாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'விவசாயம் தொழில் அல்ல; வாழ்க்கை முறை' - டிடிவி தினகரனின் பொங்கல் வாழ்த்து