ஆளும் அதிமுக அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் முடியடைகிறது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனிடையே தமிழ்நாட்டில் மே 3ஆம் தேதி முதல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
எனவே, ஏப்ரல், மே மாத இறுதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகு காணொலி வாயிலாக இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இதில், கடந்த 10ஆம் தேதி சென்னை வந்த இந்திய தேர்தல் ஆணையக் குழு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாகவும் அதனை முறைப்படி செயல்படுத்துவது தொடர்பாகவும் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான சோதனைகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு முறையை கண்காணிக்க ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் குறைந்தது 10 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவை அறிவிக்கக்கோரிய வழக்கு: மார்ச் 15ஆம் தேதி விசாரணை