ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிக்கி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மத்திய முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் டிசம்பர் 3ஆம் தேதி பிணை வழங்கியது. இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 4ஆம் தேதி 106 நாள்கள் சிறைவாசத்திற்கு பிறகு சிதம்பரம் வெளியே வந்தார். இந்நிலையில், சென்னை வந்த அவருக்கு மேளதாளங்கள் முழங்க கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமசிவாயம், நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத், டி. ஜெயகுமார் உள்ளிட்ட பல மூத்தத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய சிதம்பரம், "உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காங்கிரஸ் அரசு 35 கிலோ அரிசி உத்தரவாதமாகக் கொடுத்தது, அது ஐந்து கிலோவாகக் குறைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் வேலைவாய்ப்பின்மை 7.3 விழுக்காடு என ஆய்வு நிறுவனம் ஒன்று கணித்திருக்கிறது. 'உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது'.
டெல்லியில் வெங்காய விலை 200 ரூபாய். வெங்காயத்தை விளைவித்த விவசாயிக்கு கிடைப்பது 7 ரூபாய். இதைத்தான் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பேச வேண்டும். சுதந்திரத்தின் குரல்வளையை நெறிப்பதுதான் பாஜகவின் நோக்கம். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களை சோதனைகளின் மூலம் பாஜக பயமுறுத்துகிறது. கங்கை நதியில் குளித்தால் அனைத்து பாவங்களும் போய்விடும் என பாஜகவினர் கூறுகின்றனர். ஒருநாளும் அந்த கங்கையில் நான் குளிக்க மாட்டேன். நீதிக்கும் நீதிபதிக்கும் மட்டுமே தலை வணங்குவேன். அநீதிக்கு என்றும் தலை வணங்கமாட்டேன்.
இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட நாளிலிருந்து இந்திய பொருளாதாரம் படிப்படியாக சரிந்து ஐந்து விழுக்காட்டை எட்டியுள்ளது. இந்த ஐந்து விழுக்காடு என்பதே பொய். அதற்கும் கீழாக மூன்றரை விழுக்காடாகக்கூட இருக்கலாம் என முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் கூறியுள்ளார். மூன்றரை விழுக்காட்டில் ஒரு நாடு வளர்ந்தால் எப்படி முன்னேறும்.
ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோயுள்ளன. 30 கோடி மக்கள் நாட்டில் அன்றாட கூலிகளாக உள்ளனர். பட்ஜெட்டில் பெரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய அடுத்த ஜிஎஸ்டி கூட்டத்தில் வரியை உயர்த்த திட்டமிட்டு உள்ளனர். ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்று அதில் 1.5 லட்சம் கோடி ரூபாயை 800 முதலாளிகளுக்கு கொடுக்கிறீர்கள், அந்தப் பற்றாக்குறையை சரிசெய்ய ஏழை மக்களின் மீது வரி போடுகிறீர்கள்.
எங்களது பேனா சும்மா இருக்காது எழுதுவோம் உங்களை அம்பலப்படுத்துவோம். சிறையிலிருந்தது பெரிய விஷயம் கிடையாது பல தலைவர்கள் சிறைத்தண்டனையை அனுபவித்துள்ளனர். மரக் கட்டிலில் படுத்தால் முதுகெலும்பு வலுவடையும்" என்றார்.
இறுதியாக பாரதியார் பாடலை மேற்கோள் காட்டி, வீழ்வேனென்று நினைத்தாயோ, ஒரு நாளும் நாங்கள் வீழமாட்டோம் என தனது பேச்சை சிதம்பரம் முடித்துக்கொண்டார்.
இதையும் படிங்க: என்கவுன்டரால் நீதி நிலைநாட்டப்படாது - எஸ்.ஏ. பாப்டே