சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணா நகர் வள்ளுவர் நெடும் பாறையைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். சென்னையின் பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 36 வழக்குகள் உள்ளன. இவர் ரவுடி பினுவின் கூட்டாளியாவார்.
இந்நிலையில் ரவுடி பினுவை காவல்துறையினர் கைது செய்த நிலையில், ராதாகிருஷ்ணன் அரும்பாக்கம்,அமைந்தகரை,அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் பெரிய ரவுடியாக உருவாகி மாமூல் வசூலித்து வந்துள்ளார். பின்னர் கள்ளதுப்பாக்கி வைத்திருந்த வழக்கில் தேடப்பட்டு வந்த இவரை காவல்துறையினர் வலைவீசி தேடி கடந்த வருடம் அக்டோபர் மாதம் கோவையில் வைத்து கைது செய்தனர்.
பின்னர் ஜாமீனில் வெளிவந்த ரவுடி ராதாகிருஷ்ணன் மீண்டும் தலைமறைவாகி இருந்துள்ளார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதோடு, ரவுடி ராதாகிருஷ்ணனை பிடிக்க தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் ரவுடி ராதாகிருஷ்ணன் திருப்பூரில் தலைமறைவாக இருப்பதாக காவல்துறையினர் தகவல் வந்தது. இதனை அடுத்து தீவிர வாகன சோதனையில் திருப்பூர் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அப்போது காரில் வந்த ரவுடி ராதாகிருஷ்ணன் மற்றும் அவருடன் இருந்த இரண்டு கூட்டாளிகளை திருப்பூர் மங்களம் காவல்துறையினர் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
பிறகு சென்னை காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தனிப்படை காவல்துறையினரை அனுப்பி, ரவுடி ராதாகிருஷ்ணனை கைது செய்து, சென்னை கொண்டு வந்தனர். பின்னர் செங்குன்றம் காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவருடன் அவரது கூட்டாளிகள் 2 பேரையும் சென்னை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 9 சவரன் நகை பறிப்பு: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை!