தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்த் மற்றும் ஸ்டான்லி கல்லூரி முதல்வர், மருத்துவர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய கல்லூரி முதல்வர், ”உலகம் முழுவதும் 3.75 கோடி பேர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்லீரல் நோய் குறித்து மக்கள் விழிப்புணர்வு அடைய "STRANGASTRO APP" என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த செயலி மூலம் கல்லீரல் பிரச்னை குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்” என்றார்.
இதனையடுத்து திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்த் பேசுகையில், ”கல்லீரல் நோய் குறித்து ஸ்டான்லி மருத்துவர்கள் சிறப்பாக விழிப்புணர்வு செய்தனர். எல்லோர் கையிலும் ஸ்மார்ட் ஃபோன் இருக்கிறது. எனவே இந்த செயலியை மக்கள் பயன்படுத்தி இந்த தலைமுறை மட்டும் இல்லாமல் இனி வரும் தலைமுறையும் எந்த பிரச்னையும் இல்லாமல் வாழ வேண்டும்.
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் நன்றாகப் பயின்றுவருகிறார்கள். நீட் மூலமாக வருகின்ற மாணவர்கள் உலகில் சிறந்த மருத்துவராக விளங்குவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நீட் தேர்வு தமிழ்நாட்டுக்கு வந்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகின்றது. அதனால் இனி வரும் காலங்களில் மாணவர்கள் நன்றாக பயின்று அதிகம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள்.
சூர்யா கல்விக் கொள்கை குறித்து பேசுவதற்கு முன்பாகவே அவர் அகரம் அறக்கட்டளை மூலம் நிறைய மாணவர்களை படிக்க வைத்துள்ளார். அவர் சொல்லும் கருத்து ஒரு நல்ல விஷயத்திற்காகத்தான் இருக்கும். சூர்யாவின் கல்விக் கொள்கை குறித்த கருத்துக்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு” என்றார்.