சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகநாத் சென்னை உயர் நீதிமன்றத்தல் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சென்னையில் வீட்டு உபயோகம் மற்றும் வணிக காரணங்களுக்கான 1044 மில்லியன் லிட்டர் நீர் தேவையில், தினமும் 830 மில்லியின் லிட்டர் தண்ணீர் மெட்ரோ நிறுவனத்தால் தற்போது விநியோகிக்கப்படுகிறது.
சென்னை மக்களின் நீர் தேவை 2031ல் நாள் ஒன்றுக்கு 2100 மில்லியன் லிட்டராக அதிகரிக்கும் என கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி பகுதிகளில் 1,50,000 மில்லியன் கியூபிக் அடி கொள்ளளவு கொண்ட 4100 நீர்நிலைகள் தற்போது உள்ளன. இவைகளை முறையாக தூர்வாரி கண்காணித்தால் தண்ணீர் பஞ்சம் ஏற்படாது.
அதனால், சென்னை மக்களின் 80 விழுக்காடு நீர்த்தேவையை நிறைவு செய்யும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட நீர் தேக்கங்களையும், கொளத்தூர் ஏரி, ரெட்டேரி ஏரி, கொரட்டூர் ஏரி, போரூர் ஏரி உள்ளிட்ட ஏரிகளையும் 10 அடி ஆழம் தூர்வாரி அதன் கொள்ளளவை அதிகரிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விரிவாக்கம் செய்யப்பட்ட பெருநகர சென்னை மாநாகராட்சி பகுதிக்குட்பட்ட 245 ஏரிகளை தூர்வார திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து, சென்னைக்கான முக்கிய நீர் தேக்கம் மற்றும் ஏரிகளை தூர்வார எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 4ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ’அயன்’ பட பாணியில் நடைபெற்ற கடத்தல் சம்பவம்!