சென்னை வில்லிவாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றியவர் தமிழழகன். இவர் பிரபாகர் என்பவரிடம் இருபதாயிரம் ரூபாய் கையூட்டு கேட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புக் காவல் துறையிடம் பிரபாகரன் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், அலுவலர்களின் அறிவுறுத்தலின்படி அண்ணாநகர் காவல் நிலையம் அருகே உள்ள கோயில் அருகே பிரபாகர், ஆய்வாளர் தமிழழகனை வரச்சொல்லி அவரிடம் பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் தமிழழகனை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
ஆய்வாளர் தமிழழகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 2012ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற ரயில்வே காவலர் சுப்பிரமணியன், அண்ணாநகர் மேற்குப் பகுதியைச் சேர்ந்த மனை வணிகம் (ரியல் எஸ்டேட்) தொழில் செய்துவரும் பிரபாகர் என்பவருக்குமிடையிலிருந்த சொத்து பத்திரப்பதிவு தொடர்பான பிரச்னையில் தலையிட்டு, பிரபாகர் என்பவர் நவம்பர் மாதத்திற்குள் இரண்டு லட்சம் ரூபாய் சுப்பிரமணியனுக்கு தர வேண்டும் என்று சுமுகமாகப் பேசி முடித்துள்ளார்.
இதற்காக பிரபாகரனிடம் தமிழழகன் இருபதாயிரம் ரூபாய் பணத்தை கையூட்டாகக் கேட்டுள்ளதும் தெரியவந்தது. ஏற்கனவே கையூட்டு வாங்கிய புகாரில் கோயம்பேடு காவல் நிலையத்திலிருந்து வில்லிவாக்கம் காவல் நிலையத்திற்கு தமிழழகன் மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாமுல் தர மறுத்த தள்ளுவண்டி கடை மீது தாக்குதல்; ஓய்வுபெற்ற ஆய்வாளர் மீது வழக்கு!