சென்னை லயோலா கல்லூரி, மாற்று ஊடக மையம் இணைந்து நடத்தும் 7ஆம் ஆண்டு "வீதி விருது விழா" நிகழ்ச்சி கல்லூரியின் வளாகத்தில் தொடங்கி உள்ளது. நிகழ்ச்சியில் முதலாவதாக, நிகழ்வுக்கு வரும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு ’ஊர் அழைப்பு’ வழங்கப்பட்டது. கொல்லங்குடி கருப்பாயியின் அசத்தலான கிராமியப் பாடலும், ராமசாமி குழுவினரின் நாதஸ்வர இசையும் இசைக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்துள்ள புகழ்பெற்ற நாட்டுப்புறக் இசைக்கலைஞர்கள், இசைகளை முழங்க கல்லூரியின் வாயிலில் இருந்து அனைத்து விருந்தினர்களையும் ’ஊர் அழைப்பு’ என்கிற கலாசார நிகழ்வின் மூலம் வரவேற்றனர். தமிழர்களின் கலாசாரப்படி விருந்தினர்கள் அழைப்பு என்பதை இதன்மூலம் இவ்விழாவிற்கு வந்தவர்கள் அறிந்துகொள்ள முடிந்தது. இதைத்தொடர்ந்து தமிழர்களின் பழமையான கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின.
இதில் சிறப்பு விருந்தினராக உதயசந்திரன் ஐஏஎஸ் கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய அவர், “2,600 ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தறிவு பெற்ற சமூகமாக தமிழர்கள் வாழ்தார்கள் என்ற உண்மையை கீழடி மூலம் நாம் நிரூபித்திருக்கிறோம். தமிழ் இனத்தின் முக்கியமான அம்சம் என்னவென்றால் இதனுடைய தொன்மையும், தொடர்ச்சியும்தான். கீழடி அகழாய்வு இன்னும் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்” என்றார்.
இதையும் படிங்க: கண்ணீரில் வாழும் கலைஞன் - தசாவதாரம் படப்புகழ் தோல்பாவைக் கலைஞர் முத்துலட்சுமண ராவ்!