சென்னை : சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன. சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளிலும் பருவத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இரண்டாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு மூன்றாவது செமஸ்டர் தமிழ் தேர்வு இன்று நடைபெற இருந்தது. தேர்வு தொடங்கிய சில மணி நேரத்தில் மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித் தாள் 4-வது செமஸ்டர் தமிழ் தேர்வுக்கு வழங்க வேண்டிய கேள்வித்தாள் என்பது தெரிய வந்தது.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித் தாள் கடந்த ஆண்டு அச்சடிக்கப்பட்டு, கடந்த முறை 4-வது செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் உடனடியாக பல்கலைக்கழகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து வினாத் தாள் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியை தொடர்ந்து பருவத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கவுரி, பழைய கேள்வித் தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு குளறுபடி ஏற்பட்டது உண்மை தான் என்றார்.
மேலும் தமிழ் பருவத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, வேறொரு நாளில் இதே தேர்வு நடத்தப்படும் என தெரிவித்தார். குளறுபடிக்கு யார் காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணை வேந்தர் கவுரி கூறினார்.
இதையும் படிங்க: விண்ணில் பாய்ந்தது விக்ரம் எஸ் ராக்கெட் ...