சென்னை: திருவல்லிக்கேணி பெரிய தெருவில் இயங்கி வருகின்ற பீஸ் பார்க் விடுதியில், நேற்று (ஆசஸ்ட் 4) இரவு 1.20 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, மளமளவென 4 தளங்களில் தீ பரவி புகை மூட்டம் ஏற்பட்டது.
இது குறித்து விடுதி ஊழியர் அளித்த தகவலின் பேரில், எழும்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இதனையடுத்து விடுதி அறையில் தங்கியிருந்த 7 நபர்களை தீயணைப்பு துறையினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒருவர் உயிரிழப்பு - 6 பேர் சிகிச்சை
பின்னர் விபத்து குறித்து திருவல்லிக்கேணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விடுதியின் முதல்தளத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
மேலும் விடுதியில் அனைவரும் உறங்கி கொண்டிருந்ததால் தீப்புகையானது மளமளவென பரவி அனைவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. அதில் மதுரை காமராஜர் சாலையில் இயங்கி வரும் தமிழ்நாடு கனிமவளத்துறை லிமிடெட்டில் துணை மேலாளராக பணியாற்றி வரும் அரவிந்தன் (50) உயிரிழந்தார். மேலும் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து அரவிந்தனின் உடலை உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்த காவல் துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏரியில் மீன் பிடிக்க சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு