சென்னை: சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகருக்கு, சவூதி ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் நேரடி விமான சேவையை இயக்கி வந்தது. இந்நிலையில், இந்த விமான சேவையானது கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலகம் முழுவதும் ஏற்பட்ட கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, கரோனா தொற்று பாதிப்பு முடிந்து சகஜ நிலை திரும்பிய பின்னர், சென்னையில் இருந்து பல நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டன. ஆனால் சென்னை - ஜித்தா நகருக்கு இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்காமல் இருந்து வந்தது. இதனால் சென்னையில் இருந்து புனித உம்ரா பயணத்திற்கு செல்பவர்களும், வேலைக்காக செல்பவர்களும் குவைத், பக்ரைன், துபாய், இலங்கை வழியாகச் செல்ல வேண்டி இருக்கிறது.
இதனால் சவுதி அரேபியாவிற்கு செல்ல 13 மணி நேரம் ஆவதால், சென்னையில் இருந்து நேரடி விமான சேவையைத் தொடங்க வேண்டும் என பல கோரிக்கைகள் வைக்கப்பட்டன. மேலும், நேரடி விமான சேவையைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் இந்திய ஹஜ் அசோசியேஷ்ன் தலைவர் அபூபக்கர் கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பின் நேற்று (டிச.28) இரவு முதல் இருந்து, சவூதி ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மீண்டும் ஜித்தா - சென்னை இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கியது. இந்த விமான சேவை வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்படுகிறது. நேரடியாக விமான சேவை தொடங்கியதால், அதில் 215க்கும் மேற்பட்ட புனித உம்ரா பயணிகள் சென்றனர். அவர்களுக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் கூறுகையில், “சென்னையில் இருந்து ஜித்தாவிற்கு நேரடி விமான சேவை பல ஆண்டுகளுக்குப் பின் இயக்கப்படுகிறது. ஜித்தாவிற்கு நேரடியாக ஐந்தரை மணி நேரத்தில் செல்வதால் பயண நேரம் குறைகிறது. மேலும், 200 ரியால் முதல் 610 ரியால் வரை பணம் மிச்சம் ஆகும்.
நேரடி விமான சேவையைச் சென்னையில் இருந்து தொடங்க வேண்டும் என இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பாக கடந்த 3 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுக்கப்பட்டது. நேரடி விமான சேவையைத் தொடங்க உதவிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியா உம்ரா, ஹஜ் துறை அமைச்சருக்கும் தமிழக மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2024ஆம் ஆண்டு ஹஜ் பயணம் 100 சதவீதம் டிஜிட்டல் செய்யப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் இருந்து 1 லட்சத்து 35 ஆயிரம் ஹஜ் விண்ணப்பங்கள் வந்துள்ளது. தமிழகத்தில் ஹஜ் விண்ணப்பங்கள் வழங்க இன்னும் 17 நாள் கால அவகாசம் உள்ளது. தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹஜ் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த ஆண்டு ஹஜ் பயண ஒதுக்கீடு அதிகமாகக் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
உலக இஸ்லாமிக் கவுன்சில் கூட்டத்தில் மத்திய மந்திரி ஸ்மிதி ராணியுடன் நானும் வருகிற ஜனவரி 19ஆம் தேதி பங்கேற்க உள்ளேன். இந்திய ஹஜ் பயணிகளுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மானியம் நிறுத்தப்பட்டு விட்டது. முதல் விமானத்தை வெற்றிகரமாக்கிய விமான நிலைய ஆணையம், சுங்க இலாகா, சி.ஐ.எஸ்.எப், குடியுரிமை, தமிழக போலீஸ் அதிகாரிகள் உள்பட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, சென்னை - ஜித்தா நேரடி விமான சேவை 4 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளதால் புனித பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கும், வேலைக்காகச் செல்பவர்களும் பயனுள்ளதாக இருக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தென்காசி வழித்தடத்தில் மதுரைக்கு ரயில்- தெற்கு ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு!