சென்னை: சென்னை - மைசூர் வந்தே பாரத் விரைவு ரயில் இன்று காலை 4.30 மணியளவில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மைசூர் செல்வதற்காக இன்று அதிகாலை பேசின் பிரிட்ஜ் கேரஜில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ரயிலை எடுத்து வந்து நடைமேடையில் நிறுத்தியுள்ளனர். அப்போது ரயிலில் பயணிகள் ஏறியபோது ரயில் பெட்டிகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, உள்ளே கற்கள் சிதறி கிடப்பதைக் கண்டு பயணிகள் உடனடியாக சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் இந்தச் சம்பவம் குறித்து அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அதிகாலை நேரத்தில் வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசப்பட்டு கண்ணாடிகள் உடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரயில் மீது கல் எறிந்த நபர் குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த மார்ச் 28ஆம் தேதி சென்னை - மைசூர் வந்தே பாரத் ரயில் வாணியம்பாடி அடுத்து சென்று கொண்டிருந்தபோது ரயில் மீது ஒரு நபர் கல் வீசினார். அதில் ரயிலின் எஸ் 14 கோச்சின் கண்ணாடி உடைந்து இருந்தது.
இதனை அடுத்து ரயில் மீது கல் வீசிய நபரை ஜோலார்பேட்டையில் வைத்து போலீசார் கைது செய்திருந்தனர். அதேபோல் தற்போது மீண்டும் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசப்பட்டுள்ளது. ரயில் மீது கல் வீசிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்தியாவின் பல பகுதிகளிலும் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசும் சம்பவங்கள் நடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.