ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருது மத்திய அரசால் வழங்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியா முழுவதும் 47 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு, பெயர்களும் வெளியிடப்பட்டன. அதன்படி, ஆசிரியர் தினமான இன்று (செப். 5) நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட ஆசிரியருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை காணொலி காட்சி மூலம் வழங்கி கவுரவித்தார். அதன்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற காணொலி காட்சி மூலம் சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சி. சரஸ்வதி நல்லாசிரியர் விருது பெற்றுக்கொண்டார். மேலும், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திலீப் நல்லாசிரியர் விருது பெற்றுக்கொண்டார். கரோனா தொற்று காரணமாக நல்லாசிரியர் விருது வழங்கும் விழா காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
இது குறித்து தலைமை ஆசிரியர் ஆர்.சி. சரஸ்வதி, நல்லாசிரியர் விருதிற்கு என்னை பரிந்துரை செய்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதாவிற்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பனும் தமிழ்நாடுக அரசுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இந்த நல்லாசிரியர் விருதை தனது பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் பகிர்ந்து கொள்வதாக கூறினார். மேலும் இனி வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக பணியாற்ற இந்த விருது உதவும் என்று நம்புவதாக தெரிவித்தார். மேலும் இங்கே வரும் மாணவிகள் ஒழுக்கம் மிகுந்த, அறிவு சிறந்த மாணவிகளாக, நல்ல குடிமகன்களாக வெளியே வருவார்கள் என்று தானும் தனது ஆசிரியர்களும் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க..வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைதான பிக்பாஸ் போட்டியாளர்!