சென்னை: அண்ணா நகரில் இயங்கிவரும் தனியார் நிறுவனம் ஒன்று வரி செலுத்தாத காரணத்தினால், அந்நிறுவனத்தின் வங்கிக்கணக்கு வணிகவரித்துறை அலுவலர்களால் முடக்கப்பட்டது.
இந்நிலையில், பணம் கட்டி முடித்த பிறகு வங்கி கணக்கை மீண்டு(ம்) தொடங்கி நடத்துவதற்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்கவேண்டும் என வணிகவரித்துறை உதவி ஆணையர் சரவணகுமார் (38) கேட்டதாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசிடம் அந்நிறுவனம் புகார் செய்திருந்தது.
இதன்பேரில் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை புகார்தாரரிடம் கொடுத்து அனுப்பினர். நேற்று மதியம் அண்ணாநகரில் உள்ள அலுவலகத்தில் லஞ்சமாக கேட்ட பணத்தை வாங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவலர்கள் சரவணகுமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும், அவரிடமிருந்து லஞ்சப் பணத்தையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட உதவி ஆணையர் சரவணகுமாரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் கேட்ட பெண்- வைரல் வீடியோ