சென்னை: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டரவாக்கத்தில் கடந்த 23ஆம் தேதி ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் குடி போதையில் வட மாநில தொழிலாளர்கள் இரு கும்பலாக மோதிக் கொண்டனர். இது குறித்து இரு கும்பல் மீதும், தொழிற்சாலையின் மேலாளர் புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில், காவலர் ரகுபதியுடன் சக காவலர்கள் விசாரணைக்காக சம்பவ இடத்திற்குச் சென்றனர். இதையடுத்து, விசாரணைக்குச் சென்ற காவல் துறையினருக்கும், வட மாநிலத்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், விசாரிக்கச் சென்ற காவலர்களை தாக்கி, அவர்களின் வாகனங்களை வடமாநிலத் தொழிலாளர்கள் சேதப்படுத்தியதாக கூறப்பட்டது.
இதனால் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளிகள் மீதும், வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், செங்குன்றம் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை காவல் துறையினர் மற்றும் 100க்கும் மேற்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டு மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 28 வடமாநில தொழிலாளர்களும் அடையாளம் காணப்பட்டு, அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஆவடி காவல் ஆணையர் சங்கர் கூறியதாவது, "கடந்த 23ஆம் தேதி இரவு ஓர் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினை சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து 33 பேரை கைது செய்துள்ளோம். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய எந்த செயலானாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.
மேலும் இது போல் அசம்பாவிதம் இனி நடைபெறாமல் இருக்க நிறுவனங்களுடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவே இரண்டு நாட்கள் கால தாமதம் ஆனது. இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்களை, தொழிலாளர் நலத்துறையினர் மேற்பார்வையிட்டு வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சேலத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து - 10க்கும் மேற்பட்டோர் காயம்!