சென்னை: தண்டையார்பேட்டையில் வசிக்கும் திருமணமான பெண்ணுடன், அதே பகுதியைச் சேர்ந்த அரை சட்டை பாலாஜி என்பவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்து உள்ளார். இதற்கிடையில் தங்கராஜ் என்பவரும் அதே பெண்ணை காதலித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி தனது நண்பர்களான பிரேம்குமார், சியாம் பிரகாஷ், சங்கர், சங்கரின் மனைவி முனிஷா ஆகியோர் சேர்ந்து, தங்கராஜின் வீட்டிற்கு சென்று அவரை கத்தியால் குத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த தங்கராஜை, ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் கொலை, கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பாலாஜி உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதலாவது கூடுதல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன்பு விசாரணை நடைபெற்றது.
அப்போது, காவல்துறை தரப்பில் மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எ.கோவிந்தராஜன் ஆஜராகி வாதிட்டார். வாதங்கள் நிறைவு பெற்ற நிலையில், நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், பாலாஜி உள்ளிட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மதுரை சுற்றுலா ரயில் தீவிபத்து விவகாரம்: 5 பேருக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!