சென்னை ஓட்டேரி பிரிக்லின் சாலையில் அமைந்துள்ள லும்பினி ஸ்கொயர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அமித். இவரது மகள் ரூஹி(15) தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், விடுமுறை காரணமாக வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது, இவரது சித்தப்பாவின் மகள் மின்விசிறியின் வேகத்தை குறைக்கும் படி ரூஹியிடம் கூறியுள்ளார்.
வேகத்தை ரூஹி குறைக்க மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அருகிலுள்ள அறைக்குச் சென்று மின்விசிறியை வேகமாக வைத்து டிவி பார்க்குமாறு ரூஹியிடம் அவரது சித்தி கூறியுள்ளார்.
இதனால், கோபமடைந்த ரூஹி ஓடிவந்து 12ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர், ரூஹியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ரூஹியின் குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுக்கடை வாசலில் ரவுடி கொலை: சிசிடிவி வைத்து தீவிர விசாரணை!