சென்னை: சென்னை செனாய் நகர் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் நூதன முறையில் பணம் எடுக்கபட்டது வங்கி அலுவலர்களுக்கு தெரியவந்தது. அந்த ஏடிஎம்மில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வங்கி அலுவலர்கள் ஆய்வு செய்த போது இரு நபர்கள் ஏடிஎம்மில் பணம் எடுத்தது போல் காட்சிகள் பதிவாகி இருந்தது. ஆனால், கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக காண்பிக்காததால் வங்கி அலுவலர்கள் அதிர்ச்சியடைந்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கொள்ளையர்களின் புது டெக்னிக்
இதே போல் விருகம்பாக்கம், வடபழனி, பெரம்பூர், ராமாபுரம், பெரியமேடு, கீழ்ப்பாக்கம், வேளச்சேரி என ஒரே நாளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்களில் இருந்து 20 லட்சம் ரூபாய் வரை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து முதற்கட்டவிசாரணையில் எஸ்பிஐ கேஷ் டெபாசிட் மெஷினை மட்டுமே குறிவைத்து அந்தக் கும்பல் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது. ஓகேஐ என்ற ஜப்பான் நிறுவனம் தயாரித்த ஏடிஎம் இயந்திரத்தில் ஏடிஎம்கார்டை பயன்படுத்தி பின் நம்பர் செலுத்திய பின்பு பணம் வெளியே வரும். ஆனால், 20 நொடிக்குள் எடுக்கவில்லையென்றால் அந்தப் பணம் மீண்டும் இயந்திரத்திற்குள்ளே சென்றுவிடும்.
அதைப் பயன்படுத்தி கொண்ட கும்பல் சென்சார் ஷட்டரை விரலால் மறைத்து பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. கொள்ளையர்கள் போலி முகவரி மூலம் தொடங்கிய கணக்கை வைத்து கொள்ளையடித்ததால் அவர்களை நெருங்குவதில் காவல்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டெபாசிட் மிஷினில் பணம் எடுக்கத் தடை
மேலும், கொள்ளையர்களை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மத்திய குற்றப்பிரிவு வங்கி தடுப்பு காவலர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். குறிப்பாக, கொள்ளையர்கள் எஸ்பிஐ வங்கியின் டெபாசிட் மிஷினை மட்டுமே குறிவைத்து கொள்ளையடித்தது ஏன்? என நடத்திய விசாரணையில் அந்த மிஷினில் மட்டுமே பணம் வெளியே வரும் இடத்தில் சென்சார் உள்ளது தெரியவந்துள்ளது.
மற்ற ஏடிஎம் மிஷினில் மற்றொரு இடத்தில் சென்சார் இருப்பதால் கொள்ளை அடிக்க முடியாது என எண்ணி எஸ்பிஐ ஏடிஎம் டெபாசிட் மிஷினை மட்டுமே கொள்ளை கும்பல் குறி வைத்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம் மிஷினில் பணம் எடுப்பதற்கு அந்த வங்கி தடை விதித்துள்ளது.
ஹரியானா கும்பல்?
குறிப்பாக, கொள்ளையடிப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் சென்னை வந்து லாட்ஜில் தங்கி ஏடிஎம்மை நோட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் 20ஆம் தேதி சென்னை முழுவதும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
கொள்ளையர்கள் ஹரியானாவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை அங்கு விரைந்துள்ளது. இதே பாணியில் மற்ற மாநிலங்களில் குற்றம் நடந்துள்ளதா? என விவரங்களை சேகரிக்கும் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, ஏடிஎம்மில் டெபாசிட் செய்வதுபோல் செய்து பணம் திருடப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது காவல்துறையினர் விசாரணையில், பணம் எடுப்பது போல் செய்து பணத்தை கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: ஏடிஎம் 'ஷட்டரை' வைத்து சென்னையில் வித்தைக் காட்டும் நபர்கள்; பல லட்சம் அபேஸ்!