சென்னை: ஆந்திராவிலிருந்து சென்னைக்கு நகை வாங்க வந்த நகை வியாபாரிகளிடமிருந்து போலீஸ் போல நடித்து ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளை (Chennai Robbery) அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நகை வியாபாரி, சுப்பாராவ். இவர் தனது மேலாளர் ரகுமான் ஆகியோர் யானைக்கவுனி காவல் நிலையத்தில் இன்று (பிப்.3) புகார் ஒன்றை அளித்தனர். அதில், 'ஆந்திராவில் இருந்து தனியார் பேருந்து மூலமாக இன்று காலை சென்னைக்கு வந்ததாகவும், சென்னை வால்டாக்ஸ் சாலையில் பேருந்தில் இறங்கி, அங்கிருந்து ரூ.1.40 கோடி பணத்துடன் வீரப்பன் சாலை வழியாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வீரப்பன் தெரு, துரைசிங்கம் தெரு சந்திப்பில் கார் ஒன்று ஆட்டோவை வழிமறித்து நிறுத்தியுள்ளது.
டிப்டாப்பாக காரில் இருந்து இறங்கிய கும்பல் ஆட்டோவையும் பையையும் சோதனையிட வேண்டும் எனக் கூறியுள்ளனர். மேலும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இருவரிடமும் தாங்கள் காவல்துறையயைச் சேர்ந்தவர்கள் எனவும்; உரிய ஆவணம் இல்லாமல் பணம் இருப்பது தொடர்பாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது என சோதனை நடத்துவதாகக் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியான இருவரும், காரில் லத்தி, கைவிலங்குகள் இருந்ததால் போலீஸ் என நினைத்து அவர்களிடம் இருந்த பணத்தை பையுடன் கொடுத்துள்ளனர். பணத்தைப் பெற்றுகொண்ட அவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த இருவரும் நடந்தவைகள் குறித்தும் இழந்த தங்களின் பணத்தை மீட்டுத் தரவும் கோரிக்கை விடுத்துள்ளனர்'.
அந்தப் புகாரின் பேரில், போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து காரில் வந்த நபர்கள் யார் என்பது குறித்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், பட்டப்பகலில் போலீஸ் எனக் கூறியதோடு, ஒன்றரை கோடி ரூபாயை எடுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, சம்பவ இடத்தில் வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பிரதான வணிகப் பகுதியான பாரிமுனை, பூக்கடை உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள மொத்த நகை பட்டறை தொழிலாளர்களிடமிருந்து நகையை வாங்கி ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. அவ்வாறு நகை வாங்க வரும் சிலர் கொண்டுவரும் பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வரும்போது போலீசார் வாகனத் தணிக்கையில் சிக்குவதும் அவ்வப்போது நிகழ்வதுண்டு.
இதனை நன்கு அறிந்த கொள்ளைக்கும்பல் ஒன்று, அதே பாணியில் நகை வியாபாரிடமிருந்து பணத்தைக் கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பில் கலெக்டர், கிளார்க் பணியிடை நீக்கம்: நெல்லை மாநகராட்சி ஆணையர் அதிரடி!