சென்னை: இந்திய தொழிற்சாலை கூட்டமைப்பின், இந்திய பசுமை கட்டிட சபை சார்பில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், மூன்று நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது. அதில், இந்திய தொழில் கூட்டமைப்பின், இந்திய பசுமை கட்டிட கவுன்சில் (IGBC) சார்பில் பசுமை கட்டிடங்கள் தொடர்பான தேசிய கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது.
அதில் இக்கூட்டமைப்பில் நிர்வாகிகள், இந்தியாவில் முதன் முதலாக 'நிகர பூஜ்ஜிய கார்பன் மதிப்பீட்டு அமைப்பை' தொடங்கி வைத்தனர். மேலும், பசுமை தொழிற்சாலை கட்டிட மதிப்பீடு 2.0, பசுமை கட்டிடம் 1.0, பசுமை வளாகம் 1.0 ஆகிய திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சிக்கு விருது: இவ்விழாவில், இன்று (நவ.24) கார்பன் உமிழ்வில் சிறந்த முறையில் செயல்பட்டதற்காக, உயர்ந்த பசுமை தர விருதினை சென்னை மாநகராட்சி கட்டடத்திற்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருதை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் பெற உள்ளார். மேலும், இந்தியாவில் முதல் முறையாக ஒரு அரசாங்க கட்டடத்திற்கு வழங்கப்படும் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று நாள் கருத்தரங்கு: இந்த கருத்தரங்கில் இடம் பெற்ற கண்காட்சியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், காற்று மாறுபடுதலை கட்டுப்படுத்துதல் தொடர்பான பொருட்களைக் கொண்ட 180 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கருத்தரங்கில், மொத்தம் 180 தொழில்நுட்ப வல்லுநர்கள், நாள் ஒன்றுக்கு 60 நபர்களாக சிறப்புரையாற்றுகின்றனர்.
ஐஜிபிசி சார்பில் 'பள்ளியை பசுமையாக்குதல்' எனும் தலைப்பில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கும், 'பசுமைக்கான வடிவமைப்பு' எனும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கட்டிடக்கலை மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
ரிப்பன் மாளிகை வரலாறு: 1688ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதியிலிருந்து மெட்ராஸ் மாநகராட்சி செயல்படத் தொடங்கியது. அதற்கான தனி கட்டடத்திற்காக, 1909ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி, அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த மின்டோ பிரபு (Lord Minto), இந்த மாளிகைக்கு அடிக்கல் நாட்டினார்.
அதன் பணிகள் முடிந்து, 1913ஆம் ஆண்டில் ரிப்பன் மாளிகை திறக்கப்பட்டது. உள்ளூர் தன்னாட்சி நிர்வாகத்தின் தந்தை என்று அழைக்கப்படும் பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ரிப்பன் பிரபு (Lord Ripon) நினைவாக, இந்த மாளிகைக்கு 'ரிப்பன் மாளிகை' என்று பெயர் சூட்டப்பட்டது.
மேலும், இந்த ரிப்பன் மாளிகை தற்போது சிறந்த முறையில் பரமரிக்கப்படுவதாலும், மாசில்லாமல் பசுமையாக இயங்கி வருவதாலும், சென்னை ரிப்பன் மாளிகை கட்டத்திற்கு இந்திய தொழிற்சாலை கூட்டமைப்பின், இந்திய பசுமை கட்டிட சபை சார்பில் பசுமை விருது வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை டூ கோவை ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி! நேர விரயத்தை குறைக்க தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு!