சென்னை: திருவான்மியூர் அடுத்த திருவள்ளுவர் நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதில் அருணா வெங்கட்ராமன் என்பவருக்கு சொந்தமான ஒரு வீடும் இருந்துள்ளது. இந்த வீட்டை விற்க முடிவு செய்த அருணா வெங்கட்ராமன், கல்யாணசுந்தர ராமன் என்பவருக்கு கொடுக்க முடிவு செய்துள்ளார்.
அதற்காக அந்த வீட்டை பொது அதிகாரப் பத்திரமாக மாற்ற முடிவு செய்த அருணா வெங்கட்ராமன், அவரது நண்பரான மந்தை வெளியைச் சேர்ந்த சவுந்தரராஜன் பெயரில் பொது அதிகாரப் பத்திரம் பதிவு செய்துள்ளார். இதற்கான முன்பணத்தையும் வீட்டை வாங்கிய கல்யாணசுந்தர ராமன், அருணா வெங்கட்ராமனுக்கு கொடுத்துள்ளார்.
இந்நிலையில், இந்த பொது அதிகார பத்திரத்தை தவறாகப் பயன்படுத்திய சவுந்தரராஜன், அந்த வீட்டை கல்யாண சுந்தரராமன் பெயருக்கு பதிவு செய்வதற்குப் பதிலாக சவுந்தரராஜனின் மனைவி கற்பகம் பெயரில் பதிவு செய்து மோசடி செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த கல்யாண சுந்தரராமன் ஆயிரம் விளக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் அவர்கள் மீது நம்பிக்கை மோசடி வழக்குப் பதிவு செய்த போலீஸார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கு சென்னை அல்லிக்குளத்தில் உள்ள நில அபகரிப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜேஷ் ராஜூ, குற்றம் சாட்டப்பட்ட தம்பதி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் அதனால், இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அது மட்டுமின்றி, குற்றவாளி சவுந்தரராஜனால் கல்யாண சுந்தரராமனுக்கு ஏமாற்றப்பட்ட இழப்புக்கு நஷ்ட ஈடாக ரூ.1 கோடியே 9 லட்சம் 3 மாத காலத்தில் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:மல்யுத்த வீராங்கனைகளுக்கு நியாயம் கிடைக்கும்.. வைரமுத்து விவகாரத்தை பற்றி பேசுவோமா..? - மதுரையில் அண்ணாமலை சீற்றம்!