சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே காலை நேரத்தில் வெயிலும், மாலை நேரத்தில் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்து இரண்டு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (செப்.16) அறிவித்தது.
இதைத் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் புறநகரில் இன்று மதியம் 3.30 மணி அளவில் இருந்து மழையானது பெய்யத் தொடங்கியது. தற்போது சென்னை மற்றும் அதன் புறநகரில் கனமழையானது கொட்டித் தீர்த்தது. சென்னையின் முக்கிய பகுதிகளான, சேப்பாக்கம், தேனாம்பேட்டை, தி.நகர், எழும்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கனமழையானது பெய்தது.
இதேபோல் சென்னை புறநகர் பகுதிகளான மதுரவாயில், திருவேற்காடு, பாடி, அம்பத்தூர், ஆவடி ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. சென்னையில் காலை முதலே வெயில் சுட்டெரித்தது. இதன்பிறகு மதியம் 2 மணி அளவில் மேற்கு திசையின் காற்று மாறுபாடு மற்றும் வெப்பச் சலனம் காரணமாக சென்னையை நோக்கி கருமேகம் படையெடுக்க ஆரம்பித்தது. இதனையடுத்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
போக்குவரத்து நெரிசல்: சென்னையில் இடைவிடாமல் மழை பெய்ததால் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் அனைவரும் மழையில் சிக்கினர். இதனால் சென்னையில் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, காமராஜர் சாலை, 100 அடி சாலை, உள் வட்டச்சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இடைவிடாத மழை காரணமாக சென்னையின் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது. அதேபோல் கத்திப்பாரா பாலத்தின் சுரங்கப்பாதை, தி.நகர் மேட்லி சுரங்கப்பாதை மற்றும் போரூர் பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடந்து வரும் இடத்திலும் மழை நீரானது தேங்கியுள்ளது.
மின் வெட்டு: சென்னையில் மாலை 3.30 மணியில் இருந்தே இடி மற்றும் மின்னல்கள் காணப்பட்டன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அம்பத்தூர், அயப்பாக்கம், ஆவடி, திருமுல்லைவாயல், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், வேப்பேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
வானிலை தகவல்: இன்று (செப்-16) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!