சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கோவிந்தசாமிநகர் இளங்கோ தெருவில் 250 வீடுகள் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக தனிநபர் தொடர்ந்த வழக்கில் வீடுகளை அப்புறப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடுகளை அகற்றும் பணியை பொதுப்பணித்துறை அலுவலர்கள் மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் பொதுப்பணித்துறை அலுவலர்கள் காவல்துறையினரின் உதவியுடன் வீட்டை அகற்றும் பணியை மேற்கொண்டனர். கிட்டதட்ட 5 நாட்கள் பணி நடைபெற்று வந்த நிலையில் நேற்று (மே8) ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி முதியவர் ஒருவர் தீ குளித்துள்ளார். இந்தநிலையில் இன்று (மே9) முதியவர் கண்ணையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இறப்பு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அலுவலர்கள் விலைபோய் உள்ளார்கள்: இந்தநிலையில், உயிரிழந்த முதியவர் கண்ணையன் குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக முதலமைச்சர் உயிரிழந்த கண்ணையன் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும். முதலமைச்சர் நேரடியாக ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கோவிந்தசாமி நகர் வந்து ஆய்வு செய்ய வேண்டும். இடிக்கப்பட்ட வீடுகளை அங்கே மீண்டும் கட்டித்தர வழிவகை செய்ய வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ரியல் எஸ்டேட் முதலாளிகள் கொடுக்ககூடிய கோடிக்கணக்கான ரூபாய்க்கு பொதுப்பணித்துறை அலுவலர்கள் விலைபோய் உள்ளார்கள் என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டுவதாக தெரிவித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பு என்று வீடுகளை இடிப்பதை தமிழக அமைச்சரவை வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல. நேற்று முதியவர் கண்ணையன் உயிரிழந்திருக்கிறார். இதனை தற்கொலை என்று பதிவு செய்யக்கூடாது கொலை என்றே பதிவு செய்ய வேண்டும்.
இந்த கொலைக்கு சம்பந்தமான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அல்லது கொலை வழக்கு போட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: வீடுகள் இடிப்பு... முதியவர் தீக்குளிப்பு... கட்சித்தலைவர்கள் குடும்பத்தாருக்கு நேரில் ஆறுதல்!