சென்னை : பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சைதாப்பேட்டை இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையம் முன்பு மகிளா காங்கிரஸ் தலைவி சுதா ராமகிருஷ்னன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதில், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி, காங்கிரஸ் சட்டப்பேரவைத்தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராணி, மாநில துணைத் தலைவர் பொன் கிருஷ்ண மூர்த்தி, தென் சென்னை ஒன்றிய மாவட்டத் தலைவர் முத்தழகன், முன்னாள் மாவட்டத் தலைவர் வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருநாவுக்கரசர் :
'பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
ஒன்றிய அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் இது போன்ற விலை வாசியை ஏற்றி மக்களுக்கு விவாதம் செய்து வருகிறது. மேலும், விலை உயர்வால் தனியார் நிறுவனங்கள் நிறைய கொள்ளையடிக்கிறார்கள். ஒன்றிய புதிய அமைச்சரவை மாற்றத்தால் ஒன்றும் மாறப்போவது இல்லை.
ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் மோடி தான் ராஜினாமா செய்ய வேண்டும். தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அமைச்சரவையில் ஒருவருக்கு இடம் கொடுத்தது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் தமிழ்நாட்டின் நலனுக்காக பாடுபட வேண்டும்' எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து மனு
இதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசர், ஜோதி மணி, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித்தலைவர் செல்வபெருந்தகை, மகிளா காங்கிரஸ் தலைவி சுதா ராமகிருஷ்ணன், தென்சென்னை ஒன்றிய மாவட்டத் தலைவர் முத்தழகன் ஆகியோர் தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்காக மனுவை வழங்கினார்கள்.
இதையும் படிங்க: ஹர்ஷ் வர்தனின் ராஜினாமா மோடி அரசு தோல்வி அடைந்ததின் ஒப்புதல் வாக்குமூலம் - ப.சிதம்பரம்