சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால், கடந்த ஜூன் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறையினர் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதை அடுத்து, அவரது நீதிமன்றக் காவல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி மீதான வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், வழக்கு மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அவரது ஜாமீன் மனு கடந்த 20ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (செப்.29) நிறைவடைந்த நிலையில், நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொளிக் காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வருகிற அக்டோபர் 13ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் அவரது நீதிமன்றக் காவல் 7வது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழகத்தில் தொடரும் அதிரடி சோதனைகள்!