சென்னை: தமிழக அமைச்சரும், திமுக கரூர் மாவட்டச் செயலாளராகவும் உள்ள செந்தில் பாலாஜி, கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான அதிமுகவின் ஆட்சிக் காலத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி இரவு கைது செய்தது.
அப்போது செந்தில் பாலாஜி உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை அடுத்து ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. உடல்நலக்குறைவு காரணமாக ஜாமீன் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 முறை ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் தற்போது 3 ஆவது முறையாக ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இன்று (ஜன.12) செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு, ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏற்கனவே 2 முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது 3வது முறையாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக ஜனவரி 11ஆம் தேதி செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 15வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சுமார் 214 நாட்களாகச் சிறையில் உள்ளார்.