சென்னை போரூர் அடுத்த மதனந்தபுரம் குறிஞ்சி தெருவில் வசித்து வந்தவர் பாஸ்கரன்(78). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டு, அழுகிய நிலையில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சம்பவம் நடப்பதற்கு முன்பும், பின்பும் பாஸ்கரனிடம் யாரெல்லாம் செல்போனில் பேசினார்கள் என ஆய்வு செய்தனர். அப்போது, அதே பகுதியில் உள்ள உணவகத்தில் ஊழியராக பணியாற்றும் மன்சூர் அகமதுவிடம், பாஸ்கரன் பலமுறை பேசியிருப்பது தெரியவந்தது.
மேலும் மனைவி, மகன்களை பிரிந்து பாஸ்கரன் வீட்டில் தனியாக வசித்து வந்ததால், மன்சூர் அகமது வேலை செய்யும் உணவகத்தில் சாப்பிடுவார். இதனால் மன்சூர் அகமதுவுக்கு, பாஸ்கரனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. மன்சூர் அகமது புதிதாக வீடு கட்டியதால் கடன் பிரச்னையில் சிக்கி தவித்து வருவதாக பாஸ்கரனிடம் தெரிவித்துள்ளார். அதற்கு பாஸ்கரன் எனக்கு பணம் வந்தவுடன் உனக்கு தருகிறேன், நீ கடனை அடைத்துக் கொள் என்று கூறி வந்துள்ளார்.
சம்பவத்தன்று பணம் வந்து வாங்கி செல் என்று பாஸ்கரன் கூறியதையடுத்து, மன்சூர் அகமது சென்றார். அப்போது மன்சூர் அகமதுவிடம், பாஸ்கரன் ஓரினச்சேர்க்கைக்கு ஈடுபடுமாறு வற்புறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மன்சூர் அகமது, பாத்ரூம் சென்று வருவதாகக் கூறி வெளியே இருந்த செங்கல்லை எடுத்து பாஸ்கரன் தலையில் அடித்துள்ளார். பின்பு கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு நகைக்காக கொலை நடந்தது போல் இருக்க வேண்டும் என்பதற்காக, அவர் அணிந்திருந்த 3 பவுன் நகை, இருசக்கர வாகனத்தை எடுத்துகொண்டு வீட்டை வெளியில் பூட்டிவிட்டு சென்றிருப்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.