சென்னை: கிறிஸ்துமஸ் தினத்தில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசம் புரிவது, பைக் ரேஸில் ஈடுபடுவது போன்ற செயலை தடுக்கும்விதமாக சென்னையில் தீவிர போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டது. அதன் அடிப்படையில் தேனாம்பேட்டையில் நேற்று (டிசம்பர் 25) இரவு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு பைக் ரேஸில் ஈடுபட்ட 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோன்று தொடர்ந்து நள்ளிரவில் உயர் அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில் 127 இருசக்கர வாகனத்தைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். குறிப்பாக பைக் ரேஸ் நடக்கும் இடங்களிலும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, பைக் ரேஸில் ஈடுபட்டவர்களின் இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கை புத்தாண்டு முடியும் வரை தீவிரமாக நடைபெறும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. மரணத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் என்ற 308 பிரிவு உட்பட குற்றத்திற்கு தகுந்தார் போல் பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, சென்னை காவல்துறை சமூக வலைதளப் பக்கத்தை இணைத்து பொதுமக்கள் பலரும் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் பைக் ரேஸ் பைக் சாகசம் உள்ளிட்டவை குறித்து அளிக்கப்படும் புகார்களையும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறாக சிசிடிவி காட்சிகள் மூலமாகவும் பொதுமக்கள் சமூக வலைதளங்கள் மூலம் தெரிவிக்கும் புகார்கள் மூலமாகவும் சென்னை முழுவதும் பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் அடையாளம் காணப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
பைக் ரேஸ் மற்றும் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஒட்டிய நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் 5000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக சென்னை நேப்பியர் பாலம் அருகே இன்று (டிசம்பர் 26) அதிகாலை பைக் ரேஸ் சென்று கொண்டிருந்தவர்களை காவல் துறையினர் விரட்டிப் பிடித்து கைது செய்துள்ளனர்.
அதில், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஷேக் அஷ்ரப் (20), இளங்கலை இரண்டாம் ஆண்டு பொருளியல் துறை மாணவர் கார்த்திக் (19), ஆகிய இருவரை கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வருகிற புத்தாண்டு முடிகிற வரை இளைஞர்கள் யாரும் பைக் ரேஸில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.