சென்னை காவல்துறையில் சைக்கிள் ராணியாக வலம் வரும் காவலர் புஷ்பராணி, 1997 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக காவல் பணியில் சேர்ந்துள்ளார். தனது 8 வயதில் தந்தை சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்ததாகவும், ஆயுதப்படை காவலராக பணி செய்ய ஆரம்பித்த பிறகுதான் சைக்கிளில் வேலைக்கு வர புஷ்பராணி ஆரம்பித்துள்ளார். மொத்தமாக 26 வருடம் காவல் பணியில் இருந்து வரும் புஷ்பராணி, அதில் 23 வருடம் சைக்கிளில் பயணம் செய்து வருகிறார்.
நீண்ட தூரம் செல்லவில்லை என்றாலும் எங்கு செல்வது என்றாலும் சைக்கிள் பயணத்தை புஷ்பராணி மேற்கொண்டு வருவதாகவும், ஒரு நாளைக்கு 10கிமீ வரை சைக்கிளில் பயணிப்பதாகவும் புஷ்பராணி தெரிவித்துள்ளார். வெளியூர் செல்வதென்றாலும் ரயிலில் வெண்டார் பெட்டியில் சைக்கிளை பார்க்கிங் செய்து வெளியூரில் சென்று பின்னர் சைக்கிளில் எடுத்து செல்வதாக புஷ்பராணி கூறியுள்ளார்.
எல்லா காவல் பணிக்கும் சைக்கிளையே தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், தான் தொடர்ந்து சைக்கிளில் பயணிப்பதை செய்திகளில் பார்த்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சைக்கிள் ஒன்றைப் பரிசளித்ததாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக சைக்கிளில் வருவதை சக காவலர்கள் கேலியாக பேசும்போது, சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அழைத்துப் பாராட்டி சைக்கிள் வாங்கிக் கொடுத்த பிறகு உடன் பணியாற்றுபவர்கள் புரிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
தனக்குப் பிடித்ததால் சைக்கிளில் பயணம் செய்வதாகவும், யாரையும் சைக்கிள் பயன்படுத்தச் சொல்லி வற்புறுத்துவதில்லை என புஷ்பராணி தெரிவித்துள்ளார். தொடர்ந்து 23 ஆண்டுகளாக சைக்கிளை பயன்படுத்தி வருவதால் தன்னுடைய பெயரான புஷ்ப ராணியை மாற்றி சைக்கிள் ராணி என உடன் பணியாற்றுபவர்கள் அடைமொழி வைத்து அழைப்பார்கள் என தெரிவித்துள்ளார். தன்னைப் போன்று காவலர் சரவணன் என்பவர் சைக்கிள் சரவணன் என்ற பெயரில் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சைக்கிள் பயணம் தனக்கு பிடித்து செய்வதாகவும், யாருக்கும் இது குறித்து அறிவுரை வழங்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். இன்றைய தலைமுறை அறிவுரை வழங்கினால் கேட்கும் அளவில் இல்லை என்று தெரிவித்துள்ளார். சைக்கிளில் பயணிப்பதால் சர்க்கரை மற்றும் bp குறைவதாக யாரிடமும் விளம்பரப்படுத்துவது இல்லை எனவும், இவ்வாறு கூறினால் தன்னையே யாராவது கேள்வி கேட்க நேரிடும் என்பதால் அறிவுரை வழங்குவதில்லை என தெரிவித்துள்ளார்.
தன்னைப் பார்த்து காவல் நிலையத்திற்கு அருகில் வேலை பார்க்கும் பல பெண்கள் சைக்கிளில் வருவதாகவும் தெரிவித்துள்ளார். சைக்கிளில் பயணிக்கும் தன்னை சென்னை காவல்துறை ஆணையரும், தமிழக டிஜிபியும் அழைத்துப் பாராட்டியது மிகவும் உற்சாகமும் மகிழ்ச்சியும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களுடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்ட முதலமைச்சர்