சென்னை: ஹைதராபாத்தைச் சேர்ந்த பைனான்சியரான கஜபதி சுப்பாராவ் தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த 4 வருடத்திற்கு முன்பாக சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ரேகா மூவிஸ் புரொடக்ஷன்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் சக்கரவர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பின்னர் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி திரைப்படம் எடுப்பதற்காக தன்னிடம் 41 லட்சம் ரூபாயைக் கடனாகக் கேட்டுப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார். பின்னர் கடனாகப் பெற்ற இந்த பணத்தை வைத்து, நடிகை கௌசல்யாவை வைத்து பக்தி படமான உத்ரா என்ற திரைப்படத்தைத் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி தயாரித்ததாகத் தெரிவித்துள்ளார். இந்த படம் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானதாகவும், அதன் பின்னர் சக்கரவர்த்தியிடம் கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பிக் கேட்ட போது, காலம் கடத்தி வந்ததாகப் புகாரில் தெரிவித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் சக்கரவர்த்தி தனது தொலைப்பேசியை எடுக்காததால், தயாரிப்பாளர் சக்கரவர்த்தியிடம் 41 லட்சம் ரூபாயைப் பெற்றுத் தரக்கோரி ஆன்லைன் மூலமாகப் புகார் அளித்திருப்பதாகத் அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகார் தொடர்பாக அண்ணா நகர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அண்ணாநகரில் வசித்து வந்த தயாரிப்பாளர் சக்கரவர்த்தி, கடந்த 6 மாதத்திற்கு முன்பு வீட்டை காலி செய்துவிட்டுத் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. மேலும் சக்கரவர்த்தி பைனான்சியரிடம் 1 கோடிக்கு மேல் கடனாகப் பெற்று மோசடியில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. சக்கரவர்த்தியின் இருப்பிடம் குறித்து செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. மூதாட்டி உட்பட இருவர் பத்திரமாக மீட்பு!