சென்னை: சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை போன்ற அசம்பாவித சம்பவங்களில் பலர் ஈடுபட்டனர். தமிழகத்தை பொருத்தமட்டில் இது போன்ற சம்பவம் சென்னையில் அதிக அளவில் காணப்பட்டது. இந்நிலையில் இதை கட்டுப்படுத்தும் நோக்கத்திலும், காவலர்களின் மனரீதியான அழுத்தங்களை குறைக்கவும் வேண்டி சென்னை காவல்துறையின் மகிழ்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், கடந்த 2 ஆண்டுகளில் காவலர்கள் தற்கொலை நிகழ்வு முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவலர்களுக்கு மறுவாழ்வு: சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் பலர் போதைக்கு அடிமையாக இருப்பதாக தெரிய வந்த நிலையில் பலர் மன அழுத்தம் காரணமாக அவதிப்பட்டு வருவதாகவும் கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் சென்னை முழுவதிலும் இருந்து ஆயிரத்து 115 காவலர்களை கண்டறிந்து அவர்களுக்கு காவலர் மகிழ்ச்சி திட்டத்தின் கீழ் ஆலோசனை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பயன்பெற்று மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
காவலர்களுக்கு ஆலோசனை:தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மனரீதியாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க கூடியவர்கள் மற்றும் போதை பொருட்களில் இருந்து எவ்வாறு தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்கின்ற ஆலோசனை வழங்கக்கூடிய கைதேர்ந்த ஆலோசகர்கள் இந்த காவலர் மகிழ்ச்சி திட்டத்தில் சேவையாற்றி வருகின்றனர்.
மேலும் இந்த ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்குவதற்காகவே சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி வளாகத்திற்கு உள்ளே மகிழ்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சி மையம் தொடங்கிய காலத்தில் பலரும் விருப்பமின்றி வந்த நிலையில் தற்பொழுது பலர் தாங்களே விரும்பி மகிழ்ச்சி மையத்திற்கு வருகை புரிந்து ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்று வருகிறார்கள்.
காவலர் மகிழ்ச்சி திட்டத்திற்கு குவியும் பாராட்டு: இந்த மகிழ்ச்சி திட்டம் மூலமாக காவலர்கள் பெருமளவில் பயனடைந்து வருவதால் இந்த திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இந்த திட்டத்தை சென்னையில் தொடங்கியதைப் போல தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் தொடங்கினால் காவலர்கள் பலர் நலம் பெறுவார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக: காவலர்களின் நலன் கருதி சென்னை பெருநகர காவல்துறை சார்பில் காவலர்கள் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டது. இந்த காவலர்கள் மறுவாழ்வு மையம் என்பது காவலர்களின் நலன் கருதியும், மனரீதியாக அவர்களை தங்களது பிரச்சனைகளில் இருந்து வெளிக்கொண்டு வரவும் ஆலோசனை அளிக்கக்கூடிய மையமாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த காவலர் மறுவாழ்வு மையத்தை மேலும் மெருகேற்ற மகிழ்ச்சி என்ற திட்டம் சென்னை காவல்துறையால் கொண்டுவரப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பெண் தவறவிட்ட 5 சவரன் நகையை மீட்டுக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்.. போலீசார் மரியாதை..