சென்னை: சென்னை கொடுங்கையூர் டி.எச்.சாலையை சேர்ந்தவர் ராதா(34). இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி தமிழ் இலக்கியா என்பவர் தொடர்பு கொண்டு, ஆழ்வார்ப்பேட்டை டி.டி.கே.சாலையில் டிஜி பட் இன்போ டெக் என்ற ஆன்லைன் டிரேடிங் கம்பெனியில் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
பின்னர், வெளி நாடுகளில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் மீது முதலீடு செய்து வருவதாகவும், அதன் மூலமாக அதிகப்படியான லாபம் எடுத்து வருவதாக அந்த பெண் ஆவணங்களை அனுப்பி நம்ப வைத்துள்ளார். குறிப்பாக 1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் ஒரு மாதத்தில் 6 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறி வாக்குறுதி அளித்துள்ளார்.
இதனை நம்பிய ராதா முதற்கட்டமாக 1 லட்ச ரூபாய் அந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். அவருக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாயை அந்நிறுவனம் கொடுத்துள்ளது. அதன் பிறகு சரியான முறையில் இரட்டிப்பாக பணம் தருவதை நம்பிய ராதா பல தவணைகளாக பல லட்சம் அந்நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக பெற்று வந்துள்ளார்.
இதையும் படிங்க: டெலிகிராம் மூலம் அதிகரிக்கும் மோசடி.. சென்னை சைபர் க்ரைம் போலீஸ் வார்னிங்!
இந்நிலையில், டிரேடிங்கில் சிக்னல் என்ற முறை ஒன்று இருப்பதாகவும், அதில் 1லட்சம் முதலீடு செய்தால் 2 மாதத்தில் 2 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும் என நிறுவனம் மூலமாக தெரிவித்துள்ளது. பின்னர் மீண்டும் ராதா மற்றும் அவரது தங்கை இணைந்து சுமார் 25 லட்சம் ரூபாய் வரை அந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். அதன் பிறகு மாதந்தோறும் வட்டி சரியான முறையில் வராததால் இது குறித்து நிறுவன ஊழியரிடம் கேட்ட போது அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருவதாகவும், முடிந்தவுடன் பணத்தை திருப்பி தருவதாகவும் ராதாவிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் கூறியபடி பணம் வராததால் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ராதா சென்று பார்த்த போது மூடிவிட்டு தலைமறைவாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து ராதா விசாரித்த போது நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் பெயர்களை மாற்றி மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், கோயம்புத்தூரில் இதே போல பல பேரிடம் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடனடியாக 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த டிரேடிங் நிறுவனம் மீது அபிராமபுரம் காவல் நிலையத்தில் ராதா புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் மோசடி என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரில் பண மோசடி.. காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!