சென்னை: வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் (Mantous Storm) மாமல்லபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடந்தது. இந்த நேரத்தில் சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் சுமார் 120 பெரிய மரங்கள் சரிந்ததுடன், பலத்த காற்றின் காரணமாக வீடுகளும் சேதமடைந்தன. 6 போக்குவரத்து சிக்னல்களும், பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களும் சேதமடைந்தன.
இதனிடையே சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம், ஓட்டேரி, கொண்டித்தோப்பு, புதுப்பேட்டை ஆகிய 4 காவலர் குடியிருப்புகளை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், "சென்னையில் 6 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் சேதமடைந்துள்ளதாகவும், அவை அனைத்தும் சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். புயலால் சென்னையில் 120 பெரிய மரங்கள் விழுந்துள்ள நிலையில், இதுவரை 94 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள மரங்களையும் அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேக்கம், சாலையில் நீர் தேக்கம் போன்ற எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை. சென்னையில் புயலின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் எங்கும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சிபிசிஐடி அலுவலகத்தில் புயல் காரணமாக டவர் சரிந்து விழுந்ததாகவும், அதனால் எந்தவித பாதிப்போ, இடையூறோ ஏற்படவில்லை. புயலின் காரணமாக மடிப்பாக்கத்தில் 2 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், சைதாப்பேட்டையில் சுவர் இடிந்து விழுந்து தாயும், குழந்தையும் மூளைச்சாவு அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த முறை காவலர் குடியிருப்புகளில் மின் மீட்டர்களை உயர்த்தி வைக்க வேண்டும், கான்கிரீட் சாலைகளை அமைக்க வேண்டும், தெரு விளக்குகளை போட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்ததாக கூறினார். இந்நிலையில் அந்த கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்து ஏற்கனவே ரூ.2.87 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இனி முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம், கொண்டித்தோப்பு, புதுப்பேட்டை மற்றும் ஓட்டேரி காவலர் குடியிருப்புகளில் சீரமைப்புப் பணிகளை துவங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காஞ்சி மாநகராட்சி குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளநீர் - பொதுமக்கள் கடும் அவதி