சென்னை அமைந்தகரை அண்ணா ஆர்ச் அருகில் போக்குவரத்து காவல்துறை சார்பில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம், ரோட்டரி சங்கம் சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி ஆகியவற்றை சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். அங்கு கூடியிருந்த பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோருக்கு கபசுரக் குடிநீரை அவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி, இணை ஆணையாளர் எழிலரசன், இந்திய மருத்துவத்துறை இணை இயக்குநர் அசோகன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கூறும்போது, "மாநகரில் தினமும் காவல்துறை சார்பில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கரோனா தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இரவு ஊரடங்கின்போது 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன". இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தலைமைச் செயலகத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்