சென்னை: பல்லாவரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்த 65 வயதான மூதாட்டி ஜெய்புன் என்பவர், தனது 17 வயது பேத்தி காணாமல் போனதாக பல்லாவரம் காவல் நிலையத்தில் முன்னதாக புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். விசாரணையில், சிறுமியை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜேசிபி ஓட்டுநர் நவீன்குமார் (21) என்பவர் காதலித்து ஆசைவார்த்தை கூறி தன்னுடன் அழைத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினர் அவர்களது செல்போன் சிக்னலை ட்ராக் செய்தபோது சென்னை, கானத்தூரில் இருவரும் இருப்பது தெரியவந்தது. பின்னர், பல்லாவரம் காவல் துறையினர் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து 17 வயது சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தி அவரது பாட்டியுடன் அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நவீன் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர் தாம்பரம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கரூரில் பூட்டிய வீட்டில் 20 சவரன் தங்க நகைகள் கொள்ளை