சென்னையின் அம்பத்தூரை அடுத்த பாடி சீனிவாசநகர், 10ஆவது தெருவைச் சேர்ந்தவர், வெங்கட்ராமன் (50). இவர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருகிறார். நேற்று மாலை (ஜூலை 29) வெங்கட்ராமன் தனது மோட்டார் இருசக்கர வாகனத்தில் அலுவலகப் பணிக்குச் சென்றார். பின்னர், நள்ளிரவு வேலை முடிந்து, அதே மோட்டார் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குப் புறப்பட்டார்.
இவர் பாடி சி.டி.எச் சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, திடீரென்று அவரது வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்தது. இதனால் வெங்கட்ராமன் மோட்டார் இருசக்கர வாகனத்தை உருட்டிக்கொண்டே வீட்டுக்குப் புறப்பட்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், அவரை வழிமறித்துள்ளனர்.
பின்னர், அவரை திடீரென்று மூவரும் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு, வெங்கட்ராமனின் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.20ஆயிரம் பணத்தைப் பறித்துள்ளனர். அதையடுத்து அவர்கள் மூவரும் அங்கிருந்து மோட்டார் இருசக்கர வாகனத்தில் தப்பினர்.
படுகாயமடைந்த வெங்கட்ராமனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கொரட்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் வழிப்பறியில், ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ. 50 ஆயிரம் கேட்டு மருந்து கடை உரிமையாளருக்கு ரவுடி கொலை மிரட்டல்