கரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வீட்டை விட்டு வெளியே வர தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை மீறி பொதுமக்கள் பலர் சுற்றி வருவதால், அவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர்.

தேவையின்றி வெளியே சுற்றித் திரிபவர்களால் கரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். இதனால் கரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டத்திற்கு மட்டும் 4 நாட்கள் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் ஒருவரும் வெளியே வராமல் தடுப்பதற்காக ரோந்துப் பணிகளை மேற்கொள்ளும் காவல் துறையினர், ட்ரோன் மூலமாகவும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வில்லிவாக்கம், அம்பத்தூர், எர்னாவூர், மணலி, பாடி உட்பட பல்வேறு இடங்கள் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படுகிறது. எர்னாவூரில் ஊரடங்கை மீறி வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் ட்ரோனை கண்டு பயந்து வீட்டிற்குள் ஓடியுள்ளனர்.