சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், ' அடுத்த 24 மணி நேரத்தில், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, கடலூர், நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், நீலகிரி, திருவண்ணாமலை, கோயம்புத்தூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை வரை மழை நீடிக்கும். பின்னர் இரண்டு நாட்களுக்குப்பின் மழை படிப்படியாக குறையும். அதன் பின்னர் மீண்டும் மழையின் தீவிரம் இருக்கும்.
மேலும், குமரி கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் கேரள கடற்கரை பகுதி, மாலத்தீவுகள், கேரள கடலோரப் பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பகுதியில் 14 செ.மீ , கொடைக்கானலில் 13 செ.மீ மழையும்; மாமல்லபுரத்தில் ஏழு செ.மீ மழையும் பதிவாகியுள்ளது' என்றார்.
இதையும் படிங்க:
பிரேசில் பல்கலை.யுடன் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை ஒப்பந்தம்