ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து நேற்று மதியம் சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்குப் பல தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துவரும் நிலையில் சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் தனது வாழ்த்தை வித்தியாசமான முறையில் தெரிவித்துள்ளது
சென்னையில் தற்போது வரலாறு காணாத வகையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிவருகிறது. நகரின் முக்கிய நீர் ஆதாரமான புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பல ஏரிகள் வறண்டுவருகின்றன. சென்னையின் குடிநீர் தேவையைப் போக்க வேலூரிலிருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரப்படுகிறது.
இந்நிலையில், சந்திரயான் 2 வெற்றி குறித்து சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில், "சந்திரயான் 2 வெற்றிக்கு வாழ்த்துகள். நாங்கள் சென்னையில் புதிய நீர் ஆதாரங்களை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். நீங்கள் நிலவில் ஏதேனும் தண்ணீரைக் கண்டுபிடித்தால், முதலில் யாரை அழைக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்" என்று ட்வீட் செய்துள்ளது.
இதை பலரும் ரீ-ட்வீட் செய்துவருகின்றனர்.