சென்னை குடிநீர் வாரியம் சார்பில் திறந்தவெளி கூட்டம் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை அன்று நடைபெற்றுவருகிறது. கரோனா நோய் தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் 2020 முதல் அனைத்து பகுதி அலுவலகங்களிலும் திறந்தவெளி கூட்டம் நடத்த இயலவில்லை.
தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து அனைத்து அலுவலகங்களிலும் திறந்தவெளி கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 13ஆம் தேதியன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை குடிநீர் வாரிய கூட்டம் அனைத்து பகுதியின் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் பொருட்டு வேண்டும் ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் கூட்டம் நடைபெறும்.
இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், வரி, கட்டணங்கள், நிலுவையிலுள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மழைநீர் சேகரிப்பு, பராமரிப்பு தொடர்பான விளக்கங்களையும் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.