சென்னை: கலைஞர் நூற்றாண்டு சர்வதேச மாரத்தான் போட்டி சென்னையில் நாளை (ஆக.6) அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது. உலகிலேயே முதல்முறையாக திருநங்கைகள் 1,063 பேர் உட்பட மொத்தம் 73,206 பேர் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்கின்றனர். முதல் முறையாக ஒரே நேரத்தில் லாங்கஸ்ட் ரன்னிங் சீரிஸ் (Longest Running Series) என்ற பெயரில் இந்த மாரத்தான் போட்டி நடைபெற இருக்கிறது.
இதில் 9 பிரிவுகளாக மொத்தம் ரூ.10.70 லட்சம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்படுகின்றன. பரிசு வழங்கும் விழாவில் முதலமைச்சருடன் பல்வேறு நாடுகளின் தூதர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் 5 கி.மீ., 10 கி.மீ., 21.1 கி.மீ., 42.2 கி.மீ. தூரம் என 4 பிரிவாக மாரத்தான் போட்டி நடக்கிறது. இப்போட்டிகள் நாளை அதிகாலை 4 மணி முதல் 11 மணி வரை நடைபெறும்.
அனைத்து பிரிவு போட்டிகளும் மெரினா அண்ணா நினைவிடத்தில் தொடங்கி தீவுத்திடலில் நிறைவடையும். இதையொட்டி, அப்பகுதிகளில் நாளை அதிகாலை 3 மணி முதல் 11 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மெட்ரோ ரயில் நிறுவனமும் இணைந்து, சிறப்பு பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க உள்ளவர்களுக்கு இலவச பயண பாஸ் வழங்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் வெளியிட்ட செய்தி குறிப்பில், "கலைஞர் நூற்றாண்டு சர்வதேச மாரத்தான் நாளை 06.08.2023 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதனையொட்டி மாரத்தான் பங்கேற்பாளர்களின் வசதிக்காகவும், அவர்களுக்கு இடையூறு இல்லாமல் எளிமையான பயண அனுபவத்தை வழங்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் கலைஞர் நினைவு சர்வதேச மாரத்தான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதன்படி, மாரத்தான் பங்கேற்பாளர்கள், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் QR குறியீடு போடப்பட்ட அட்டையை பயன்படுத்தி, நாளை (ஆகஸ்ட் 6ஆம் தேதி) அதிகாலை 3.40 மணி முதல் மதியம் 12.00 மணி வரை (இருமுறை மட்டும் – Round Trip), மெட்ரோ ரயிலில் எவ்வித கட்டணமும் இன்றி பயணம் செய்து கொள்ளலாம்" என மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை, சின்னமலை, கிண்டி, விமான நிலையம், விம்கோ நகர், ஆகிய ரயில் நிலையங்கள் முதல் அரசினர் தோட்டம் வரை, மேலும் பரங்கி மலை முதல் சென்டரல் ரயில் நிலையம் வரை அதிகாலை 3.40 மணி முதல் மெட்ரோ ரயில்கள் செயல்படும்” என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் மீண்டும் உலா வரும் டபுள் டெக்கர் பேருந்து… சென்னைவாசிகள் மகிழ்ச்சி!