சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், விருதுநகர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
ஏப்ரல் 21 முதல் 23ஆம் தேதிவரை மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
ஏப்ரல் 20, 21 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) 50 முதல் 80 விழுக்காடு வரை இருக்கக்கூடுமென்பதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்" என்று தெரிவித்துள்ளது.