தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விடாமல் மழை பெய்துவருகிறது. தொடர் மழையால் சென்னை, புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பல பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பலத்த மழை தொடரும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நுங்கப்பாக்கத்தில் 178 மிமீ மழையும், மீனம்பாக்கத்தில் 33 மிமீ மழையும், செங்குன்றத்தில் 128 மிமீ மழையும் பதிவாகியுள்ளதாக, தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
விடாது பெய்து வரும் மழையால் சென்னை, புறநகர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மாவட்டத்தின் முக்கிய சுரங்கப்பாதைகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன.