இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தென்மேற்குப் பருவமழை காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல், சேலம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக’ சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அதில், 'கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி - பேச்சிப்பாறை பகுதியில் 9 சென்டி மீட்டர் மழையும், கரூர் பரமத்தி பகுதியில் 8 சென்டி மீட்டர் மழையும், குழித்துறை மற்றும் துவாக்குடி பகுதிகளில் 6 சென்டி மீட்டர் மழையும், திருக்காட்டுப்பள்ளியில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
மேலும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த ஆறு மணி நேரத்தில் புயலாகவும் அதனைத் தொடர்ந்து 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக வலுவடைந்து நாளை பிற்பகல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மகாராஷ்டிரா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு குஜராத் கடற்கரையில் ஹரிஹரேஷ்வர் மற்றும் டாமனுக்கு இடையே ராய்ப்பூர் அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். அதே போன்று லட்சத் தீவு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீன் பிடிப்பதை தவிர்க்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.