சென்னை: தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களே வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இன்று(பிப்.20) முதல் 24 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொருத்தமட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் வெப்பநிலை அதிகபட்சமாக 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரையிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக் கூடும்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு ஏதுமில்லை என தெரிவித்த வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுவுமில்லை எனவும் தெரிவித்துள்ளது. இதனிடையே சென்னையில் படிப்படியாக வெப்ப தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
மேலும் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளதாகவும் இது வரும் நாட்களில் 3 டிகிரி செல்சியசில் இருந்து 4 டிகிரி வரை அதிகரிக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கணவன், மாமியாரை துண்டு துண்டாக வெட்டிய மருமகள்.. நாடகம் அம்பலமானது எப்படி?