மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சிலை கலைப்பதற்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகம் அருகில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
இதுகுறித்து மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவி பவித்ரா கூறியதாவது, "மத்திய அரசு மருத்துவக் கல்வியில் நெக்ஸ்ட் தேர்வை கொண்டு வரக்கூடாது. இந்த தேர்வைக் கொண்டு வந்தால் மாணவர்கள் இளங்கலைப் படிப்பு முடிக்கும்போது தங்களுக்கு செயல்முறை அனுபவம் இல்லாவிட்டாலும், பாடத்தில் உள்ள கருத்தியல் அடிப்படையில் முதுகலை படிப்பிற்கான போட்டி தேர்வை எழுதுவதற்கு கோச்சிங் சென்டர்களுக்கு செல்லும் அவலநிலை அதிகரிக்கும்.
அதேபோல் பாராமெடிக்கல் முடித்தவர்கள் ஆறு மாதம் பயிற்சி பெற்ற பின்னர் கிராமப்புறங்களில் மருத்துவராக பணியாற்றலாம் என கூறப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கு தரமற்ற மருத்துவ சிகிச்சை கிடைக்கும் நிலை ஏற்படும். ஐந்தரை ஆண்டுகள் மருத்துவம் படித்த மாணவர்களும் நெக்ஸ்ட் தேர்வு எழுதினால் மட்டுமே மருத்துவராக பணிபுரியும் முடியும் என்பதை கடுமையாக கண்டிக்கிறோம்.
அதேபோல் தேசிய மருத்துவ ஆணையத்தில் 25 உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசு தரப்பில் அறிவுரை மட்டுமே கூற முடியும். முடிவெடுக்க முடியாது. இது மாநில அரசின் பிரதிநிதித்துவ உரிமையை பறிக்கும் செயலாகும் . எனவே மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கக் கூடாது"என தெரிவித்தார்