சென்னை: சென்னை மாநகராட்சி, அமெரிக்காவின் சான் ஆன்டோனியோ மாநகரம் ஆகியவை சகோதரத்துவ இணைப்பு (Sister city affiliation) ஒப்பந்தங்களின்படி, தொடர்ந்து செயல்படுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று(டிச.6) ரிப்பன் கட்டடக் கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சான் ஆன்டோனியோ மாநகரத்தின் மேயர் ரான் நிரன்பர்க் மற்றும் அவரது குழுவினருக்கு சென்னை மாநகராட்சி சார்பாக நினைவுப் பரிசினை வழங்கி சிறப்பித்தார். இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டமைப்பு, திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி முதன்மைச் செயலாளர் எடுத்துரைத்தார்.
அதைத் தொடர்ந்து சென்னையும், சான் ஆன்டோனியோ மாநகரமும் இணைந்து, இருமாநகர மக்களது ஆக்கப்பூர்வ உறவுகளை மேம்படுத்துவதுடன், கல்வி, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பில் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையிலும், இரு மாநகர மக்களின் பண்பு, அறிவுத்திறம், பொருளாதாரம் ஆகியவைகளை மேலும் வளப்படுத்தும் வகையிலும் செயல்படுவோம் என இரண்டு மேயர்களும் ஒருவருக்கொருவர் உறுதி அளித்துக் கொண்டனர்.