சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாதாந்திர மாமன்ற கூட்டம் இன்று (செப்.27) நடந்தது. இக்கூட்டத்தில், சென்னையில் இருக்கும் மாமன்ற உறுப்பினர்களுக்கு முழு உடற்பரிசோதனை நடைபெறும் என மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தெரிவித்தார்.
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியுடன் தொடங்கிய இக்கூட்டத்தில், மேயர். ஆர்.பிரியா, மறைந்த மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி அவருக்கு இரங்கல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து திமுக, அதிமுக, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் மறைந்த 59வது வார்டு உறுப்பினர் சரஸ்வதிக்கு இரங்கல் தெரிவித்தனர்.
மாமன்ற உறுப்பினர்களுக்கு பரிசோதனை: முன்னதாக பேசிய மேயர்.ஆர்.பிரியா, 'நம் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மக்கள் பணியை செய்து வருகின்றனர். இதனால் அவர்களின் உடல்நலத்தை அவர்கள் பார்த்துக் கொள்வதில்லை. இதனால், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுன் கலந்து ஆலோசித்து சென்னை ஓமந்தூரார்,அரசு பல்நோக்கு மருத்துவமனையில், பெருநகர மாநகராட்சியில் இருக்கும் 196 உறுப்பினர்களுக்கும் முழு உடல் பரிசோதனை (Master Check up) செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அறிவித்தார்.
மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்: பின்னர் கூட்டத்தில் பேசிய மேயர் ஆர்.பிரியா, 'பெருநகர சென்னை மாநகராட்சி 59வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி உடல் நலக்குறைவால் காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது இறப்பு நமக்கும், இந்த மாமன்றம், எஸ்.எம்.நகர் உள்பட 59வது வார்டு பகுதி மக்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் ஆனது நிறைவேற்றி, மெளன அஞ்சலி செலுத்தினர். மேலும் நாளை மறுநாள் (செப்.29) அன்று மாமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, 122வது வார்டு திமுக கவுன்சிலர் ஷிபா வாசு, 165வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத் ஆகியோர் சமீபத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி சென்னையில் நடந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தின பேரணியில் பங்கேற்ற 146வது வார்டு திமுக கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் மாரடைப்பால் காலமானார். தொடர்ந்து, 59வது வார்டு திமுக கவுன்சிலர் சரஸ்வதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: "என்னை மன்னிச்சிடுங்க; இனிமேல் எனக்கு வாய்ப்பு வேண்டாம்" - மாநகராட்சி கூட்டத்தில் பாஜக கவுன்சிலர் பேச்சு