சென்னை: பள்ளிக்கரணையைச் சேர்ந்த செந்தில் குமார்(41) என்பவரிடம் சில மாதங்களுக்கு முன்பு கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த பழனிகுமார்(46) என்பவர், தான் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளராக உள்ளதாகவும், குறைந்த விலையில் வீட்டு மனைகள் வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பி அவர், செந்தில் குமாரிடம் பல்வேறு தவணைகளாக ரூ.14 லட்சம் பணத்தை அளித்த நிலையில், அவற்றைப் பெற்றுக் கொண்டு நீண்ட நாட்களாக இடமும் வாங்கித் தராமல் பணத்தையும் திரும்பி அளிக்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் தான் ஏமாற்றப்படுவது தெரிந்து செந்தில் குமார் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், போலி ஆய்வாளர் பழனிகுமாரை இன்று (டிச.30) கைது செய்தனர்.
போலீசார் செய்த விசாரணையில், இவர் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் எனக்கூறி, இவ்வாறாக பலரையும் ஏமாற்றியுள்ளது தெரியவந்தது. மேலும், இவர் மீது கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் 3 மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Exclusive: “தட்டி கொடுப்பார்கள் என்று நினைத்தேன், தள்ளிவிட்டார்கள்” - பிரபு சாலமன்