சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஜூலை 6) முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கிய முழு ஊரடங்கு நேற்று (ஜூலை 5) வரை நீடித்தது. இதையடுத்து இன்று முதல் வாகன போக்குவரத்து, கடைகள் திறப்பு ஆகியவற்றில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
சென்னையில் இன்று முதல் ஊரடங்கு காலத்தில் சில பணிகளை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி டீ கடைகள், பேக்கரிகள், உணவகங்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பூ, பழம், காய்கறி, பலசரக்கு கடைகள், கட்டுமான பொருள்கள் விற்கும் கடைகள், சிமெண்ட், ஹார்ட்வேர் சாப்ட்வேர் விற்கும் கடைகள், மின்சாதன பொருள்கள், பழுது நீக்கும் கடைகள் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகளைத் தவிர்த்து மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜவுளி கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சாலையோர தள்ளுவண்டி கடைகள், உலர் சலவை கடைகள், கொரியர், பார்சல் சர்வீஸ், லாரி புக்கிங் சர்வீசஸ் கடைகள், இரண்டு, நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள், இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள், நாட்டு மருந்துகள் விற்பனை கடைகள் ஆகியவற்றுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் முடிதிருத்தும் நிலையங்கள், ஸ்பா, அழகு நிலையங்கள் ஏசி போடாமல் இயக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீன் கடைகள், கூலி கடைகள், இறைச்சி கடைகள் தனிநபர் இடைவெளியை கடைபிடித்து இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை புரசைவாக்கம் பகுதியில் சிறு ஜவுளி கடைகள், நகை கடைகள், கவரிங் நகை கடைகள், பெட்டி கடை திறந்து இருந்தன. புரசைவாக்கம் பகுதியில் ஜவுளி கடைகள் அதிகம் உள்ளன. ஆனால் தற்போது சில கடைகள் மட்டுமே திறந்து இருக்கின்றன. மேலும் அரசு அறிவித்தபடி கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரும்படியும், தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புரசைவாக்கம் பகுதியில் பெரிய ஜவுளி கடைகள், பெரிய நகைக் கடைகள் திறக்கப்படவில்லை. எனினும் அப்பகுதி கூட்ட நெரிசல் இன்றி காணப்படுகிறது. பொதுமக்கள் முகமூடி அணிந்தும் தனிநபர் விலகலைப் பின்பற்றியும் ஜவுளி கடைகளில் ஆடைகளை வாங்கிச் செல்கின்றனர்.
கடைகளை தினமும் ஐந்து முறை சுத்தம் செய்ய வேண்டும், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கைகளை சுத்தம் செய்தப் பின் அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் வங்கிகள் திறக்கப்பட்டு இருந்தன. இன்று முதல், ஆட்டோவில் ஓட்டுநர் உள்பட இருவர், டாக்சியில் ஓட்டுநர் உள்பட மூவர் பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவித்த நிலையில் இன்று ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்கின.
இதையும் படிங்க... 'ஊரடங்கு தளர்த்தப்பட்டும் பயனில்லை... பேருந்து வசதி இருந்தால் மட்டுமே குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்'